

பயிர் சேத நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் அளிக்கும் மனுக்களை வேளாண்மை அதிகாரிகள் வாங்க மறுப்பதாகக் கூறி உழவர் பேரவை சார்பில் தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் நேற்று கிரிக்கெட் விளையாடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “தி.மலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும், தொடர்ந்து பெய்த கனமழைக்கு சேதமடைந்துள்ளன. பயிர் சேதங்களை ஆய்வு செய்ய வேளாண்மை அதிகாரிகள் முன்வரவில்லை. இலக்கு நிர்ணயித்து சேதத்தின் இழப்பை, அவர்களாகவே இறுதி செய்துள்ளனர். பயிர் சேதம் குறித்து புகைப்படத்துடன் அளிக்கப்படும் மனுவை ஏற்க வேளாண்மை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
வந்தவாசி வட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மட்டும் சேதமடைந்துள்ளதாக, அரசுக்கு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பினால், வெள்ளநீர் வடிந்தவுடன் பயிர்கள் உயிர் பெற்றுவிடும் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். ஆனால், வெள்ளநீரில் மூழ்கிய நெற்பயிர்களில் நாற்றே முளைத்துவிட்டது.
விவசாயிகள் மனுவை வாங்க மறுக்கும் வேளாண்மை அதிகாரிகளை கண்டித்தும், அவர்களது செயலை தமிழக அரசுக்கு உணர்த்தும் வகையில் பயிர் சேதமடைந்துள்ள விவசாய நிலத்தில் கிரிக்கெட் விளையாடி எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
சேதமடைந்த நெற்பயிர்களை சுருட்டி பந்தாக பயன்படுத்தினோம். ஒரு அணியில் வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் பேட்டிங் செய்தனர். மற்றொரு அணியில் 10 விவசாயிகள் பங்கேற்று பந்துவீச்சு மற்றும் பீல்டிங் செய்தோம். இதில் விவசாயிகள் வீசிய பந்துகளை (நெற்பயிர் சேதங்களை) சிதறடித்து 4 மற்றும் 6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
பயிர் சேதங்களுக்கு இழப்பீடு கேட்ட விவசாயிகள் அணி தோல்வியை சந்தித்து. வெற்றி பெற்ற வேளாண்மைத் துறை அதிகாரிகள் அணிக்கு கிசான் கிரிக்கெட் கிளப் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. ” என்றார்.