

தமிழகத்தில் மின்கம்பங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விருதுநகரில் புதிதாக நடப்பட்ட மின்சார கம்பம் அடியோடு முறிந்து விழுந்ததில் அதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி காளிராஜ் உயிரிழந்திருப்பதும், இன்னொருவர் காயமடைந்ததும் வேதனையளிக்கிறது. காளிராஜ் குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக நடப்பட்ட மின்சார கம்பம் உடனே முறிந்து விழுவது எளிதில் கடந்து போகும் விஷயமல்ல.
மின்கம்பிகளைப் பொருத்தி, இணைப்பு வழங்கப்பட்ட பின்னர் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் என்னவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. கடந்த ஆண்டு திருவில்லிப்புத்தூரிலும் இதே போல் மின்கம்பம் முறிந்து விழுந்தது. அப்படியானால் மின்கம்பங்கள் எந்தத் தரத்தில் தயாரிக்கப்படுகின்றன? இவை தர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனவா? இதற்கு பொறுப்பானவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற வினாக்கள் எழுகின்றன.
ஒளி தருவதற்கான மின்கம்பங்கள் உயிரைப் பறிக்கக்கூடாது. தமிழகத்தில் அனைத்து மின் கம்பங்களையும் தர ஆய்வு செய்ய வேண்டும். தரமற்றவற்றை அகற்ற வேண்டும். உயிரிழந்த தொழிலாளி காளிராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். “ என்று தெரிவுத்துள்ளார்.