

டிசம்பர் 16-ம் தேதி தேசிய அளவில் நடைபெறவுள்ள ஹாக்கி போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் தமிழக வீரர்களை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
"டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ஹாக்கி இந்தியாவின் 11வது தேசிய அளவிலான சீனியர் மற்றும் ஜூனியர் ஆண்கள் பிரிவுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறுவதற்கு, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக போட்டியில் கலந்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அணி சீனியர், ஜூனியர் வீரர்கள் கடந்த 20 நாட்களாக சென்னை எழும்பூர் சர்வதேச ஹாக்கி விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அணி சாரில் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று (04/12/2021) சனிக்கிழமை, திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி, நேரில் சென்று வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் மெடிசன் டாக்டர் கண்ணன் புகழேந்தியும் உடன் கலந்துகொண்டு, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்."
இவ்வாறு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.