

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்த்துள்ளார்.
அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அலுவலகத்துக்கு வெளியே நேற்று முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் அவரைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டி, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ''அதிமுக உட்கட்சித் தேர்தலில் சிலர் குழப்பம் விளைவிக்க முயல்கின்றனர். அதிமுகவுடன் தொடர்பு இல்லாதவர்கள், உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கட்சியில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர். அதிமுக அலுவலகத்தில் கலகம் ஏற்படுத்தாத வகையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்வதை எப்படி அனுமதிக்க முடியும்? சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.
தகுதியுள்ள யாரும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிடலாம். யாரும் இதனைத் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.