Published : 04 Dec 2021 12:48 PM
Last Updated : 04 Dec 2021 12:48 PM

உங்கள் தூய பேரன்பே என்னைக் கரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது: கமல்

உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னைக் கரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி என்று கமல் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வாரம் கமல்ஹாசன் கரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து விட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று (டிச.4) கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்னுயிரே என்னுறவே என் தமிழே... மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னைத் தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என்னிரு மகள்களுக்கும், ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி சீமான், பாமக மாநில இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அருமை நண்பர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.

என் ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புச் சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட திரைத்துறை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும். ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள். என்னுடைய விடுப்பைத் திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், 'விக்ரம்' திரைப்படக் குழுவினருக்கும், பிக் பாஸ் அணியினருக்கும், விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக் கடன்கள் செய்தும், அன்ன தானம், ரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னைத் தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது ஆனால், உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னைக் கரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு நன்றி, எனக்காகக் கலங்கிய கண்களுக்கு நன்றி. தொழுத கரங்களுக்கு நன்றி. என் பொருட்டு ஓடிய கால்களுக்கு நன்றி. உன்னத உறவுகளைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி. உங்கள் நான்''.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x