

கரூர் மாவட்டத்தில் மழைக்கு விடுமுறை அளிக்க ட்விட்டரில் கோரிக்கை வைத்த மாணவருக்கு, 'மழை குறைந்துவிட்டது. பள்ளிக்குக் கிளம்பிப் போங்க தம்பி' என ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவுறுத்திய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அரசு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து தெரிவிப்பதற்காக கலெக்டர் கரூர் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கி, பதிவிட்டு வருகிறார். மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பையும் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு தொடங்கி காலை வரை தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மு.ஈஸ்வரமூர்த்தி என்கிற 12-ம் வகுப்பு மாணவர், ''கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகையால் இன்று (டிச.4-ம் தேதி) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா'' எனக் காலையில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அவரது ட்விட்டரில், தற்போது ''மழை குறைந்துவிட்டது. பள்ளிக்குக் கிளம்பிப் போங்க தம்பி. நண்பர்களையும் கிளம்பச் சொல்லுங்க. நிறைய படிக்க வேண்டி இருக்கு'' என பதில் அளித்துள்ளார்.