அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை அவசியம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை இருப்பது அவசியம் என நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு கட்சிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனிடையே அரசாணை குறித்து நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

"முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, துறை ரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, செப்டம்பர் 13-ம் தேதி சட்டமன்றத்தில் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாகப்பட்ட வேண்டும் எனத் தனது கோரிக்கைக்கு இணங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்படும். கடந்த காலங்களில் தமிழ் மொழி அறியாத பிற மாநிலப் பணியாளர்கள் பலர் முறையாகப் பிரித்துப் பணி அமர்த்தப்படவில்லை. அதனைத் திருத்தும் வகையில் இந்த அரசாணை அமைந்துள்ளது.

கரோனா காலத்தில் வெளி மாநிலப் பணியாளர்கள் காரணமாக நிர்வாகத்தில் பல தவறுகளும் குளறுபடிகளும் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் களைவதற்காக அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை இருப்பது அவசியம்.

தற்போது பொறுப்பெற்றுள்ள அரசைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அடிப்படை முறைகளில் சில மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்துள்ளது. ஏற்கெனவே போட்டித் தேர்வுக்குத் தயாராக இருந்த மாணவர்கள் கரோனா பரவல் காரணமாகத் தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. போட்டித் தேர்வுக்கெனத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் தாகம் புரிந்ததாலேயே தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அவர்களின் கவலைகளைப் போக்க இதுவே தக்க தருணம் என்பதைத் தமிழக அரசு உணர்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது''.

இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in