அரசியல், சட்ட மாண்புகள் அறிந்த ரோசய்யா மறைவு பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அரசியல், சட்ட மாண்புகள் அறிந்த ரோசய்யா மறைவு பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.4) காலை அவரின் உயிர் பிரிந்தது.

அவரின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திர முதலமைச்சராக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிய அவர் - சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர்.

அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும்.

ரோசய்யாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரோசய்யா கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in