

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பானமுறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவைபுரிந்ததற்காக சிறந்த சமூகப் பணியாளர் விருதை ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவனுக்கும், சிறந்த நிறுவனத்துக்கான விருதை விருதுநகர் மாவட்டம் - சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளைக்கும் சிறந்த ஆசிரியருக்கான விருதைசெவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்ததற்காக ரா.ஜெயந்திக்கும், பார்வை குறைவுடையோருக்கு கற்பித்ததற்காக ந.மாரியம்மாளுக்கும் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளில் சிறந்த பணியாளர், சுயதொழில்புரிபவர் விருதை சீ.மாதேஸ்வரன், மு.ரு.ரேவதி மெய்யம்மை, ர.ராஜா,வே.தங்ககுமார், ஜோயல் ஷிபு வர்க்கி, சு.அப்துல்லத்தீப், அனுராதா, சே.சரண்யா, ஜீ.கணேஷ் குமார் ஆகியோருக்கும், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கானவிருதை தே.முத்துச்செல்வி மற்றும் கா.சர்மிளா ஆகியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநருக்கான விருதை ஏ.ரதீஷுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துநருக்கான விருதை சி.திருவரங்கத்துக்கும், விருதுகளை முதல்வர் வழங்கினார். விருதுடன், தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட்தங்கப்பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் முதன்முதலாக, தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்வுக்காக தற்போது 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மல்லவாடியில் அரசு மறுவாழ்வு இல்லம் பழுதடைந்திருந்ததால், ரூ.1 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாகவுள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்கு பூந்தமல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சிமுடித்த பார்வை குறைவுடையோருக்கு சிறப்பு நேர்வாக நூல்கட்டுநர் பணியிடத்துக்கு 17 நபர்களுக்கும், நூல் கட்டும் உதவியாளர் பணியிடத்துக்கு 14 நபர்களுக்கும் என மொத்தம் 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.