Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM

கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு: புதுவையிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடிவு

உதகை / கிருஷ்ணகிரி/ புதுச்சேரி

கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றுகண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநில எல்லைபகுதிகளை இணைக்கிறது. தற்போது, கர்நாடகாவில் 2பேருக்கு ஒமைக்ரான் தொற்றுஉறுதியானதைத் தொடர்ந்து கூடலூரில் உள்ள நாடுகாணி சோதனைசாவடியில் போலீஸார், வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர், கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனைச் சாவடியில் கர்நாடகாவில் இருந்து வரும் கார்களை தடுத்து நிறுத்தி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. காரில் இருக்கும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

2 தவணை தடுப்பூசி செலுத்தி யுள்ளவர்களை மட்டுமே நீலகிரிமாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனர். ஊசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல், சளி அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

தமிழக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடி சோதனைச் சாவடியிலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்குட் படுத்தப்படுகின்றன.

புதுச்சேரி

புதுச்சேரியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபற்றி புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறும்போது, ‘‘வெளி மாநிலங்களில் இருந்துவருவோர் எல்லைப் பகுதியில்பரிசோதிக்கப்படுவார்கள். ஆப்பிரிக்காவில் இருந்து புதுச்சேரி வந்தமூவருக்கு பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளது.ஆனாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x