

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு கோரிய நபரை தொண்டர்கள் தாக்கி விரட்டியடித்ததால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 1-ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் அடிப்படை உறுப்பினர்கள் ஒரே வாக்கில் இணைந்தே தேர்வு செய்யும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அடுத்த நாளே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் மற்றும் அமைப்பு ரீதியான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனு விநியோகம் நேற்று தொடங்கியது.
இன்று மாலை வரை வேட்பு மனு அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அமாவாசை என்பதால் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமியும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஓட்டேரியை சேர்ந்த அதிமுக தொண்டர் ஓம்பொடி பிரசாத் சிங் என்பவர், அதிமுக அலுவலகத்துக்கு நேற்று வந்து, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கேட்டார்.
ஆனால், அவருக்கு வேட்புமனு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கும் தலைமைக் கழகத்தில் உள்ள நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து,பிரசாத்தை அங்கிருந்த சிலர்தாக்கி வெளியேற்றியுள்ளனர்.
இதுகுறித்து பிரசாத் சிங் கூறும்போது, ‘‘அதிமுகவில் நான் நீண்டகாலத் தொண்டன். ஜனநாயக முறைப்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்பி, வேட்புமனு பெற அலுவலகம் வந்தேன். ஆனால், தலைமைக் கழக நிர்வாகிகள் என்னை தாக்கிவிட்டனர்” என்றார்.
இதுகுறித்து கேட்டபோது, தலைமைக் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் ஒரே வாக்கின் மூலமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதுதெரியாமல் பிரசாத் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மட்டும், போட்டியிட விரும்புவதாக கூறினார்.
மேலும், அவரது வேட்புமனுவை கட்சித் தொண்டர்கள் யாரும் முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை. இதை அவரிடம் தெளிவுபடுத்த முயன்றபோது, அவர் தேவையின்றி தகராறு செய்தார். மேலும், தலைமை குறித்து அவதூறாகப் பேசியதால், கோபமடைந்த தொண்டர்கள் அவரைதாக்கினர். இவ்வாறு அவர்கள்கூறினர். இந்த சம்பவத்தால்,சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.
இதற்கிடையில், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பிரசாத் சிங் புகார் கொடுத்துள்ளார்.