Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM

உதவித் தொகைகள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பத்திரிகை நல வாரியம் உருவாக்கம்: செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் குழு அமைப்பு

பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர்நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குழுவையும் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

‘உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுடன், நல வாரிய உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் செய்தித் துறை அமைச்சர் கடந்த செப்.6-ம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து, பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து ஆணையிடப்படுகிறது. நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன், பின்வரும் நலத்திட்ட உதவிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும். குறிப்பாக கல்வி உதவித் தொகையாக 10-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் குழந்தைகள், 11-ம்வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும், 12-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன், மகள், முறையான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500, விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ,1,750,முறையான பட்ட மேற்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு ரூ.3,000, தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு ரூ.4,000, தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பு படித்தால் ரூ.4,000, விடுதியில் தங்கிப் படித்தால் ரூ.6,000, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு ரூ.1,000,விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200வழங்கப்படும்.

திருமண உதவித் தொகை

இதுதவிர, திருமணத்துக்கு ரூ.2,000, மகப்பேறுக்கு ரூ.6,000,கருக்கலைப்பு, கருச்சிதைவுக்கு ரூ.3,000, கண் கண்ணாடிக்குரூ.500, இயற்கை மறைவு உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

மேலும், பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித் துறை அமைச்சரை தலைவராகவும், 7 பேரை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும்,6 பேரை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் கொண்ட குழுஅமைக்கப்படும்.

விளம்பரக் கட்டணத்தில்..

நல வாரியத்துக்கு நிதி ஆதாரம் திரட்ட, அரசு விளம்பரங்களுக்கான விளம்பர கட்டணத்தில் 1 சதவீத தொகை, நல வாரியத்துக்கு வழங்கப்படும். நடைமுறையில் உள்ள பத்திகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்பட்டு, நல வாரிய உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படி, அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊடக மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x