சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கரோனா தொற்று: ஒமைக்ரான் பாதிப்பா எனக் கண்டறிய பரிசோதனை

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கரோனா தொற்று: ஒமைக்ரான் பாதிப்பா எனக் கண்டறிய பரிசோதனை
Updated on
1 min read

விமானம் மூலம் திருச்சிக்கு வந்த சிங்கப்பூர் குடிமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய, அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் விமானத்தில் வந்த 141 பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தஞ்சாவூரில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக வந்திருந்த சிங்கப்பூர் குடியுரிமைப் பெற்ற தமிழர் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்புஉறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரைத் தனிமைப்படுத்தி, புத்தூரில் உள்ள அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, ஒமைக்ரான் பாதிப்பைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், சிறப்பு வார்டில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறும்போது, ‘‘திருச்சி விமான நிலையத்துக்கு வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இந்த தொற்று, ஒமைக்ரான் வகையைச் சேர்ந்ததா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவர்நலமுடன் உள்ளார். அவரை தொடர்கண்காணிப்பில் வைத்து உள்ளோம்’’என்றார்.

இதற்கிடையே, அந்த சிங்கப்பூர்விமானத்தில் அவருடன் பயணித்தவர்கள், தங்களது உடலில் எவ்வகையான மாற்றங்கள் தென்பட்டாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்திஉள்ளனர்.

மேலும் இந்த விமானத்தில் பயணித்தவர்களின் முகவரியை, அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவித்து, அவர்களை மருத்துவக் குழுவினரின் தொடர்கண்காணிப்பில் வைத்திருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சிங்கப்பூர் விமானத்தில் அவருடன் பயணித்தவர்கள், தங்களது உடலில் எவ்வகையான மாற்றங்கள் தென்பட்டாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in