

அதிமுக தலைமை பதவியை கைப்பற்றசசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அது தனது குரல் அல்ல என்று செல்லூர் ராஜூ மறுத்துஉள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுசசிகலாவை அதிமுகவில் பலர் விமர்சித்தாலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சனம் செய்தது இல்லை. சசிகலா மீது தான் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாக பொதுவெளியில் பகிரங்கமாகக் கூறி வந்தார்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அதிமுக மதுரை மாநகர் மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமைக்கும், செல்லூர் ராஜூவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் அப்போது முதல் தலைமை மீது அவர் வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்தஒருவரிடம் மொபைல் போனில் சசிகலாவுக்கு ஆதரவாக செல்லூர் கே.ராஜூ பேசுவது போன்ற ஆடியோசமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. அதில் பேசுபவர், தன்னை மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என அறிமுகம் செய்து கொண்டு,‘‘ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலாதான் அதிமுகவின் அடையாளம், உங்களை போன்ற சீனியர்தான் இந்த நேரத்தில் அவரை வழிமொழிய வேண்டும்’’ என்று கூறிஉள்ளார்.
அதற்கு செல்லூர் கே.ராஜூ, ‘‘நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அதை நாம் முறையாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மொத்தத்தையும் இழந்துவிடுவோம். அவர்கள்கட்சியை கைப்பற்றிச் சென்றுவிடுவார்கள். அதற்காகத்தான் அமைதியாக இருக்கிறோம். நடக்க வேண்டியதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அடிச்சி காலி செய்ய வேண்டும்’’ என்று கூறுகிறார்.
அதற்கு எதிர்முனையில் பேசியவர், “காலம் கைமீறி போய்விடக்கூடாது. அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறுகிறார். இவ்வாறு அந்த ஆடியோ உரையாடலில் இடம்பெற்றுள்ளது.
அது நான் அல்ல...
இந்நிலையில் செல்லூர் ராஜூ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அதிமுகவில் குழப்பத்தைஏற்படுத்தும் நோக்கத்தில் சில விஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். இன்னொருவருடன் நான் மொபைல் போனில் பேசுவதுபோல் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள குரல் என்னுடையது அல்ல. யாரோ விஷமத்தனமாக என் குரல் போன்று மிமிக்கிரி செய்து பேசியுள்ளனர். அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.
கட்சியை இரு ஒருங்கிணைப்பாளர்களும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். எனவே, தற்போதைய நிலையில் அதிமுக தலைமைக்குப் புதிதாக ஒருவரை கொண்டுவரத் தேவையில்லை என்பது எனது கருத்தாகும்.
எனது குரலில் மிமிக்கிரி செய்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்த விஷமிகள் மீது கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.