

கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் எல்லப்பநாயுடுபேட்டை, காந்திகிராமம் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் எல்லப்பநாயுடுபேட்டை, காந்திகிராமம் கிராமங்கள் உள்ளன. இதில், எல்லப்பநாயுடுபேட்டை கொசஸ்தலை ஆற்றுக்கரையை ஒட்டியும், காந்திகிராமம் கொசஸ்தலை ஆற்று பகுதியிலிருந்து, பூண்டி ஏரிக்கு செல்லும் கால்வாய் கரையை ஒட்டியும் அமைந்துள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அணையின் உபரிநீரும், பள்ளிப்பட்டு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களின் உபரிநீரும் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து, பூண்டி ஏரிக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதனால், எல்லப்பநாயுடுபேட்டை தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. காந்திகிராம பகுதியில் நீர் சூழ்ந்துள்ளது.
கடந்த 25 நாட்களுக்கு மேலாக இந்நிலை தொடர்வதால், அந்த கிராமங்களில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்டோர் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதில், 2 கிராமங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள், தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடந்து, பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
ஒவ்வொரு மழைக்காலங்களிலும் தொடரும் இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எல்லப்பநாயுடுபேட்டை பகுதியில் மேம்பாலம் அமைக்கவும், காந்திகிராம மக்கள் எளிதாக தேசிய நெடுஞ்சாலைக்கு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.