தேர்தல் நடத்தை விதிமீறல்: நெல்லை டிஆர்டிஏ திட்ட இயக்குநர் பணியில் இருந்து விடுவிப்பு

தேர்தல் நடத்தை விதிமீறல்: நெல்லை டிஆர்டிஏ திட்ட இயக்குநர் பணியில் இருந்து விடுவிப்பு
Updated on
1 min read

ரூ. 274 கோடி திட்டப் பணிகளுக்கு அனுமதி பெற முயற்சித்ததாக புகார்

*

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட இயக்குநராக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருந்த அ.விஜயகுமார், தேர்தல் நடத்தை விதி மீறியதாக அப்பணியிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

கடந்த 4-ம் தேதி பிற்பகலில் இருந்து தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆட்சியர் உத்தரவு

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சி யருமான மு.கருணாகரன் பிறப்பித்திருக்கும் உத்தரவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.விஜயகுமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், அவரை 7.3.2016-ம் தேதி பிற்பகல் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடப்படுகிறது. அவரின் பொறுப்புகளை, மாவட்ட ஆட்சியர் கூடுதலாக கவனிப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிப்பின் பின்னணி

விஜயகுமார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 4-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குப்பின் அரசு அலுவலர்கள் எந்த திட்டங்களுக்கான கோப்புகளி லும் கையெழுத்திடக் கூடாது என்பதை தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தது. அவ்வாறு கையெழுத்திட்டால் அது தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமாரிடமிருந்து, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு 4 கோப்புகள் கையெழுத்துக்காக வந்தன. அந்த கோப்புகள் அனைத்தும் முன்தேதியிட்டு, அதாவது 4-ம் தேதியிட்டு தயாரிக்க ப்பட்டிருந்தன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.274 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான கோப்பு அதில் முக்கியமானது. இவ்வாறு கோப்புகளை கையெழுத்துக்கு அனுப்பியது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்பதால் விஜயகுமார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், தனக்கு கீழ் பணிபுரியும் 42 அலுவலர்களை தேர்தல் பணிக்கு செல்லவிடாமல் விஜயகுமார் தடுத்ததும் மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.

ஆட்சியருடன் பனிப்போர்

மாவட்ட ஆட்சியர் கருணா கரனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாகவே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பனிப்போர் நிலவிவந்தது. இதனால், ஆட்சியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் விஜயகுமாரை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. தற்போது விஜயகுமாரை பணியிலிருந்து விடுவித்ததன் மூலம் அந்த பனிப்போர் முடிவுக்கு வந்திருக்கிறது என்று ஊரக வளர்ச்சி முகமை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in