

அதிமுக அரசின் தோல்விகளை முன்வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பிரச்சாரம் செய் யும் என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. முதல்கட்டமாக 54 தொகுதிகளுக்கு வேட்பாளர் களை அறிவித்து தேர்தல் பணி களை தொடங்கியுள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வர், மக்கள் எளிதில் அணுகும் வகை யில் இருக்க வேண்டும். விவசாயி கள், தொழிலாளர்கள், மாணவர் கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருடனும் ஆட்சியாளர்கள் இயல்பாக கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சி னைகளுக்கு தீர்வு காண முடியும்.
ஆனால், தமிழக முதல் வரை யாரும் சந்திக்க முடிய வில்லை. அவரும் யாரையும் சந்திப்பதில்லை. இதனால் வளர்ச் சிக்கான எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. வளர்ச்சி இல்லாவிட்டால் அமைதி யும், சமூக நல்லிணக்கமும் இருக் காது. எனவே, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் பாஜக முன் வைக்கும்.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மத அடிப்படைவாதி களின் பயங்கரவாத செயல்கள் மிக அதிகமாக இருந்தன. பாஜக, இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டிக்கவோ, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்தத் தேர்தலில் அதிமுக அரசின் தோல்விகளை முன்னிறுத்துவதோடு, பயங்கர வாதிகளால் கொல்லப்பட்ட பாஜக தலைவர்களுக்கு நீதி கேட்டும் பிரச்சாரம் செய்வோம். திமுக கூட்டணியில் மத அடிப்படைவாத கட்சிகள் இணைந்துள்ளன. திமுகவின் ஊழலையும் மக்கள் மறக்கவில்லை. இதுகுறித்தும் பிரச்சாரம் செய்வோம்.
கூட்டணிக்காக தேமுதிகவுடன் திமுக, பாஜக பேரம் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசினால் மக்களின் கவனம் திசை திரும்பிவிடும். இந்தத் தேர்தலில் வைகோ முக்கிய மான இடத்தில் இல்லை. அதிமுக அரசின் தவறுகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் னகூறினார்.
பேட்டியின்போது பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு, துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏஎன்எஸ் பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.