

வந்தவாசி அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் கிராமத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளி வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி, நேற்று பாஞ்சரை கிராமத்துக்கு சென்ற பள்ளி வேன், மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு திரும்பியது.
வேனை ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வந்தவாசி அடுத்த பெலகாம்பூண்டி கிராமம் வழியாக வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து செங்குத்தாக நின்றது. எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக, இடது பக்கமாக வேனை ஓட்டுநர் திருப்பியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 9 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் ஆகிய 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டு தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தேசூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.