

புதுக்கோட்டையில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை கொலை செய்த வழக்கில் குஜராத் இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை 30 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி கல்குவாரி கிரஷரில் வேலை செய்து வந்தவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டானிஸ் பட்டேல் (34). இவர் கடந்த 2019 டிசம்பர் 8-ல் கீரனூர் அருகேயள்ள ஒடுக்கூரில் 17 வயது மனநிலை பாதிக்கப்பட்ட, வாய்பேச முடியாத சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 18 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் டானிஸ் பட்டேலை கீரனூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம், டானிஸ் பட்டேலுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. இதை நிறைவேற்ற அனுமதிகோரி கீரனூர் காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு விசாரித்தது. பின்னர், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யவில்லை. கொலையில்லாத உயிரிழப்பு ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.