

நடிகர் கமல் அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் நடிப்பு தொழிலில் தீவிர கவனம் செலுத்த தொடங்கிவிட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பல மாவட்டச் செயலாளர்கள் வெளியேறுவர் என திமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர் என்.முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் என்.முகேஷ்கண்ணா. இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவ்டட செயலாளராக இருந்தார். இவர் கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் மதுரையில் இன்று அவர் அளித்தப் பேட்டியில் கூறியதாவது:
நடிகர் கமல்ஹாசனின் கட்சி மட்டுமின்றி, அவரும் கோவையில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்தார். அன்று முதலே அவர் கட்சி அலுவலகதத்திற்கு வருவதில்லை. கட்சி பணிகளை கவனிப்பதும் இல்லை. யாரும் அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை.
கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த பலரும் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மற்றும் 8 திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க கமல் ஒப்பந்தம் செய்து, அதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதனால் அரசியலில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. சென்னையில் மழை வெள்ளத்தை பார்வையிடக்கூட அவரால் வர முடியவில்லை. நிலைமையை எடுத்துச்சொல்லி, கட்டாயப்படுத்திதான் அவரை மக்களை சந்திக்க வைத்தோம்.
பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மநீம கட்சியிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பலர் திமுகவில் இணையவே விரும்புகின்றனர். அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களுடன் தொடர்பில் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ம.சுப்பிரமணியன் செய்து வருகிறார்.
கமல் ரசிகர்கள் அவரைவிட்டு பிரியமாட்டார்கள். அதேநேரம் 3-வது அணியை வலுவாக அமைப்பார் என கமலை நம்பி சென்றவர்கள் ஏராளம். தோல்வியடைந்தாலும் தீவிர அரசியலில் ஈடுபட்டால் நிர்வாகிகள் கவலைப்பட மாட்டார்கள். அவரை தொடர்புகொள்ளக்கூட முடியாத சூழலில் கமலைவிட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. ரசிகர் மன்ற நிர்வாகிகளை தெரிந்த அளவிற்கு கட்சி நிர்வாகிகளை கமலுக்கு தெரியவில்லை.
அவரால் முழுநேர அரசியல்வாதியாக செயல்படும் சூழல் முற்றிலுமாக மாறிப்போனதால் என்னைப்போன்று பலரும் தொடர்ந்து வெளியேறுவர். தமிழகத்தில் 3-ம் அணி வலுப்பெறும் என்ற கனவு கடந்த தேர்தலில் கலைந்தது.
தன்னை நம்பி வந்தவர்கள் விரும்பும் இடத்திற்கு செல்லட்டும் என கமலே நினைக்கிறார். யாருக்கும் இடையூறாக இருக்க அவர் விரும்பாததால், யாரையும் தடுக்கவோ, சமாதானப்படுத்தவோ கமல் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதேநிலை தொடரும்போது கட்சியையே கலைக்கும் வாய்ப்பு அதிகம். மீண்டும் நற்பணி மன்றத்தை செயல்படுத்த திட்டமிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.