

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்து, வழக்கை விரைந்து முடிக்க சிபிஐ நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. பின்னர் துரை தயாநிதிக்குச் சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
மேலும், துரை தயாநிதி மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் துரை தயாநிதி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் 11.11.2020-ல் சம்மன் அனுப்பியது.
அந்த சம்மனை ரத்து செய்யக்கோரி துரை தயாநிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநான், ஜெயச்சந்திரன் ஆகியோர் அமர்வு, ''மனுதாரர் உரிய விசாரணை நடத்தாமல் தனக்கு சம்மன் அனுப்பியதாகக் கூறுவதை ஏற்க முடியாது. ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மனுதாரரின் கருத்து அமலாக்கத்துறை விசாரணையின் போது சாட்சிகள் அளித்த வாக்குமூலத்துக்கும், விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுக்கும் முரணாக உள்ளது. எனவே சம்மனை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்வதுடன், சிபிஐ நீதிமன்றம் வழக்கை விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.