Published : 03 Dec 2021 04:56 PM
Last Updated : 03 Dec 2021 04:56 PM

டாஸ்மாக் நேர மாற்றத்துக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனம்

கோப்புப் படம்

சென்னை

டாஸ்மாக் விற்பனைக் கடைகளுக்கான நேர மாற்றத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனப் பொதுச் செயலாளர் திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:

"டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என இருப்பதைப் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என்ற டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரின் வேண்டுகோளை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஏற்றுக்கொண்ட அடிப்படையில், பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகளும், மதுக்கூடங்களும் செயல்பட வேண்டுமென இன்று அவசரகதியில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு கரோனா தொற்று கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ள நிலையில் முதல்வர் டிசம்பர் 15 வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளதையும், மேலாண்மை இயக்குநர் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலும், ஒமைக்ரான் என்கிற உருமாறிய கரோனா நோய்த்தொற்று ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமலும் மதுபானக் கடைகளின் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்தற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தற்போது நடைமுறையில் உள்ள கடைகளின் விற்பனை நேரமானது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையாக இருக்கும்போதே சமூக விரோதிகளால் ஊழியர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும்போது கணக்கு முடிக்க மேலும் 1 மணி நேரம் கூடுதலாகக் கடையில் இருக்க வேண்டிய ஊழியர்கள் வீடு திரும்ப பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையையும், சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்கும் ஆபத்தையும் டாஸ்மாக் நிர்வாகமும், அரசும் உணராமல் நேரத்தை நீட்டித்துள்ளன.

டிசம்பர் 15 வரை கட்டுப்பாடுகள் நீடிப்பதாக அறிவித்துள்ள முதல்வரின் அறிக்கையில், செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி கடைகளின் நுழைவுவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவை டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்துவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை.

கரோனா இரண்டாம் அலையின்போது நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியும், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதையும் டாஸ்மாக் நிர்வாகமும், அரசும் போதிய அக்கறை செலுத்தவில்லை. முந்தைய ஆட்சிக் காலத்திலாவது வாடிக்கையாளர்கள் வரிசையில் வருவதற்கான தடுப்புகள் அமைத்தும், கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை என்பன உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பு உபகரணங்களை டாஸ்மாக் நிர்வாகம் வழங்கவில்லை என்பதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

டாஸ்மாக் கடைகளின் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு வந்தது என்பதையும், நிர்வாகத்திற்கும், அரசுக்கும் என்ன லாபம் வந்துவிடும் என்பதை மேலாண்மை இயக்குநர் வெளிப்படுத்திட வேண்டும். இதனால் பாதிக்கப்படப்போவது கடை ஊழியர்கள்தான். இதுபோன்ற நிர்வாக நடவடிக்கைகளில் மாற்றத்தை உருவாக்கும்போது ஊழியர்கள் தரப்பு கருத்துகளை, ஆலோசனைகளைப் பெறுவதற்கு தொழிற்சங்கங்களின் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.

முதல்வர் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக் குறைப்பு நடவடிக்கையிலும், மழை வெள்ள பாதிப்பு நிவாரண உதவி நடவடிக்கையிலும் ஈடுபட்டு வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மாற்றி அமைக்கும் அரசின் நடவடிக்கையானது ஊழியர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரின் தன்னிச்சையான அணுகுமுறை அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதையும், ஊழியர்களுக்கு ஏற்பக்கூடிய சிரமங்களையும் முதல்வர் கவனத்தில் எடுத்துகொண்டு மேலாண்மை இயக்குநரின் உத்தரவைத் திரும்ப பெற்று நடைமுறையில் உள்ள நேரமான காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதைத் தொடர உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்."

இவ்வாறு திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x