ஏழு பேர் விடுதலையில் திமுக அரசு நாடகமாடவில்லை: ஈபிஎஸ்ஸுக்கு சட்டத்துறை அமைச்சர் பதில்

அமைச்சர் எஸ்.ரகுபதி.
அமைச்சர் எஸ்.ரகுபதி.
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுவதுபோன்று திமுக அரசு நாடகமாடவில்லை என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.37 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய ரத்தம் சேகரிப்பதற்கான வாகன சேவையைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:

"நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியவை என்பது ஒட்டுமொத்தமான கோரிக்கை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால்தான் எதிர்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோருக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் 7 பேரது விடுதலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோன்று திமுக அரசு நாடகமாடவில்லை. நாடகமாடவேண்டிய அவசியமும் இல்லை.

7 பேரையும் சட்டத்துக்கு உட்பட்டு விடுதலை செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக முதல்வர் முழு முயற்சியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக எந்த வகையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறோம் என்று வெளியே கூற இயலாது.

அண்ணா நூற்றாண்டையொட்டி 700 கைதிகள் விடுதலை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் கூடுதலாக சில தளர்வுகளை தமிழக முதல்வர் விரைவில் அறிவிக்க உள்ளார். இந்தத் தளர்வுகள் மூலம் மேலும் அதிகமானோர் விடுதலை செய்யப்படுவார்கள்".

இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in