Published : 03 Dec 2021 09:42 AM
Last Updated : 03 Dec 2021 09:42 AM

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அமைச்சர் மா.சுப்பிரமணியன், (வலது), ஜெ.ராதாகிருஷ்ணன் (இடது)

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லை. அப்படி ஒருவேளை யாருக்கும் தொற்று உறுதியானால் அதை அரசு வெளிப்படையாக தெரிவிக்கும். அதுவரை யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று காலை சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

சமூக வலைதளங்களில், தமிழகத்தில் சென்னை, திருச்சி நகரங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளதாக வெளியான வதந்திகளை ஒட்டி அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துப் பேசினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:

ஒமைக்ரான் தொற்று பரவல் உள்ள ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவு வரும்வரை அவர்கள் விமான நிலையத்தில் தங்கவைக்கப்படுகிறார்கள்.

யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக, மதுரை, திருச்சி, கோவை அரசு மருத்துவமனைகளிலும், சென்னையில் கிங் இன்ஸ்டிட்யூட், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் தலா 40 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அவருடைய ரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதலுக்காக பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளோம். இன்று மாலை தான் முடிவு தெரியவரும்.

பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 10 வயது சிறுமிக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

ஆனால், தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லை. அப்படி ஒருவேளை யாருக்கும் தொற்று உறுதியானால் அதை அரசு வெளிப்படையாக தெரிவிக்கும். அதுவரை யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர்கள் ஒருவாரம் வீட்டு காவலில் வைக்கப்படுவார்கள். அவர்களை வருவாய்த்துறை உள்ளாட்சித்துறை சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவர்களுக்கு பரிசோதனையை இலவசமாக செய்யவும் தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து திரும்புவர்களில் பரிசோதனையை செய்ய முடியாத பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் பரிசோதனையை இலவசமாக செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஒமைக்ரான் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம், மாறாக கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு தென் ஆப்பிரிக்க மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம். ஆனால், மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கினால், தமிழகத்திலும் அதைப் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x