Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM

‘ஒமைக்ரான்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கை; ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு: டீன் டாக்டர் தேரணிராஜன் தகவல்

சென்னை

‘ஒமைக்ரான்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், இத்தாலி உட்பட 12 நாடுகளில் உருமாறிய கரோனா ‘ஒமைக்ரான்’ தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, வழக்கமான கரோனா தொற்றைக் காட்டிலும் அதிதீவிரமாகப் பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து இந்தியா மற்றும் தமிழகத்தில், ‘ஒமைக்ரான்’ தொற்று பரவாமல் தடுப்பதற்கானஅனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமானநிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மற்றொரு புறம், மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ வசதிகள்

அதன்படி, தமிழகத்தில் ஒமைக்ரானை எதிர்கொள்ளத் தேவையாக இருக்கும் முக்கிய மருந்துகள், ஆக்ஸிஜன் வசதிகள், முகக்கவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் ஒருவருக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் மற்றவர்களுக்கும் பரவும் என்பதால்தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனிமைப்படுத்தி கண்காணிக்க

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரணிராஜன் கூறும்போது, ‘‘ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் யாரேனும் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புதிய படுக்கைகள் ஒதுக்கும்படி சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 4-வது தளத்தில் 150 படுக்கைகள் தயார் செய்து ஒதுக்கப்பட்டுள்ளன’’ என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x