

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்மையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தி ஏராளமான தங்க நகைகள், லட்சக்கணக்கான பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்திருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லா சான்றிதழ் மிக முக்கியமானது. இந்த சான்றிதழ் கிடைத்த பின்னர்தான், தொழிற்சாலைகள் முறைப்படி இயங்க முடியும். தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, புகாருக்கு உள்ளாகும் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டல அதிகாரியாக இருந்த எம்.பன்னீர்செல்வத்தின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.33.73 லட்சம் ரொக்கம், வீட்டில் இருந்து ரூ.3.25 கோடி ரொக்கம், 450 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடுத்தகட்டமாக, சென்னை சைதாப் பேட்டை பனகல் மாளிகையில் உள்ள தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அலு வலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பாண்டியனின் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த டிசம்பர் 16-ம் தேதி சோதனை செய்தனர். இந்த சோதனையில், கணக்கில்வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க, வைர நகைகள், ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ வெள்ளி நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன்பிறகும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள், தனியார் தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு பெருமளவில் லஞ்சம் வாங்கியதாக ஏராளமான புகார்கள் வந்தன. முக்கியமாக வாரியத்தின் தலைவராக இருந்த ஏ.வி.வெங் கடாச்சலம், தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் சென்றது. ஐஎப்எஸ் அதிகாரியான வெங்கடாசலம், வனத் துறையில் பணியாற்றி கடந்த 2018-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். 2013 முதல் 2014 வரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும் இருந்துள்ளார்.
பணி ஓய்வுக்குப் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். இவர் தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வந்தன. இந்த புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. அதனடிப்படையில் வெங்கடாசலம் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர்.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கட்டிடத்தில் உள்ள வெங்கடாசலத்தின் அலுவலகம், வேளச்சேரி செகரேட்டேரியட் காலனி 2-வது தெருவில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் மற்றும் சந்தன துண்டுகள், 4 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வழக்கு மற்றும் சோதனையால் வெங்கடாசலம் விரக்தியிலும், மனஉளைச்சலிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள வீட்டில் நேற்று மதி யம் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு இதைப் பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
விரைந்து சென்ற போலீஸார், வெங்கடாசலத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. லஞ்ச புகாரில் சிக்கிய அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.