

சசிகலாவை ஒருபோதும் அதிமுக-வுக்குள் அனுமதிக்க மாட்டோம் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்தர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்லத் திருமண விழா சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அமைப்புச் செயலாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட சசிகலா கிடையாது. அவரை ஒருபோதும் அதிமுக-வுக்குள் அனுமதிக்க மாட்டோம். அதிமுக-வின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்வர்ராஜா நீக்கப்பட்டது சரியான முடிவுதான்.
முன்னாள் அமைச்சர்கள், அவர்களது உதவியாளர்கள் மீது மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில்கூட வெற்றி பெற முடியாது என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ஜெயலலிதா இருந்தபோது அதிமுக எப்படி செயல்பட்டதோ அதுபோலவே இப்போதும் செயல்பட்டு வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். கட்சியில் சில நேரங்களில் அடுத்தடுத்து விவாதங்கள் வரும். ஆனால் ஒருமித்த கருத்து எடுப்பதால், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். பலம் வாய்ந்த சக்தியாக அதிமுக இருக்கிறது.
யாரோ சிலர் கட்சிக் கொடி, பொதுச் செயலாளர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்பதால் அவர்கள் தலைவராகிவிட முடியாது. அதிமுக-வை பொறுத்தவரை ஏற்கெனவே உள்ள கூட்டணி நீடிக்கிறது. கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம். கூட்டணிக்கு வருவதும், வராததும் அவரவர் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.