

மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வில்லிபுத்தூரில் கைது செய்யப்பட்டார். இதேபோன்று, கரூர் பகுதியில் வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வில்லிபுத்தூர் அருகே உள்ள ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் டென்சிங் பாலையா(44). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தாவரவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார். மேலும் இதே கல்லூரியில் தேசிய மாணவர் படையின் பயிற்சியாளராகவும் உள்ளார்.
இவர் அக்கல்லூரி மாணவி ஒருவரிடம் தொடர்ந்து தவறாக நடக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேராசிரியர் டென்சிங் பாலையாவை நேற்று கைது செய்து அருப்புக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் பாகநத்தத்தில், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி உதவி ஆசிரியராக ஆர்.பன்னீர்செல்வம்(46) பணியாற்றி வந்தார். இவர், வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடங்களை எடுக்கும்போது, பாலியல் ரீதியான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
இதையறிந்த தாந்தோணி வட்டாரக் கல்வி அலுவலர் ரமணி அப்பள்ளிக்கு நேரடியாகச் சென்று மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, அந்த அறிக்கையின் அடிப்படையில், பட்டதாரி உதவி ஆசிரியர் ஆர்.பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து, மாவட்டக் கல்வி அலுவலர் விஜயேந்திரன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.