

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தருணத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வாழ்த்துகள். தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்துக்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகையான மாதம் ரூ.1,500/-யை, காத்திருப்போர் பட்டியலிலுள்ள 9,173 தகுதியுள்ள அனைத்து நபர்களுக்கும் வழங்கப் பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உதவியாளர் ஒருவருடன் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென உலகிலேயே முன்மாதிரி திட்டம் ரூ. 1,709 கோடியில்செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு செழிக்க இந்த அரசு முனைப்புடன் செயல்படும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: காலத்தால் கைவிடப் பட்டவர்களாக, நிம்மதி வேண்டிச் சாய்வதற்குத் தோள்களைத் தேடும் மாற்றுத் திறனாளிகள், சாதிக்கப் பிறந்தவர்கள். சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ்வதற்கு வழியில் இருக்கும் தடைக்கற்களை அகற்றிட, சமுதா யத்தின் அனைத்துத் தரப்பு மக்களும்,அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் கண்ணியம், சமத்துவமிக்க வாழ்க்கைக்காகப் போராடும் லட்சக்கணக்கான அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வாழ்த்துகள்.
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு பொறுப்பேற் றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களின் அவர்களின் உரிமைகளுக்காக மாநிலம் தழுவிய அளவில் செயல்படும் முக்கிய சங்கப் பிரதிநிதிகளை அவ்வப்போது அழைத்துப்பேசி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.