Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

கேரள மாநில பண்ணைகளில் வாத்துகள் உயிரிழப்பு- தமிழக கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியாளர்.

நாமக்கல்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வாத்துகள் உயிரிழந்ததையடுத்து அதன் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக் கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வாத்துப் பண்ணைகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள் உயிரிழந்தன. இதையடுத்து அம்மாநில கால்நடை மருத்துவர்கள் இறந்த வாத்துகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக் கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். வாத்துகள் இறந்து வருவதால் அம்மாநில வாத்து பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் தமிழக கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 4 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், நாள்தோறும் 1 கோடி முட்டை மற்றும் இறைச்சிக்கோழிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் நோய் தாக்கம் இருப்பதால், நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன் பண்ணைகளுக்குள் வரும் வாகனங்கள் மீது நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் வாத்து வளர்ப்பு அதிகம். அங்கு ஆண்டுக்கு மூன்று முறை நோய் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதை அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் கட்டுப்படுத்திக் கொள்வர். அதேவேளையில் தமிழகத்தில் இருந்து இறைச்சிக் கோழி, முட்டை அனுப்புவதில் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆண்டு முழுவதும் உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே இங்கு பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x