

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக சிவகங்கை அருகே கழிப்பறையில் வசித்த மூதாட்டியை வேறு வீட்டில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி நடவடிக்கை எடுத்தார். கழிப்பறை கட்டியதற்கான மானியம் ரூ.12,000 வழங்கப்பட்டது.
சிவகங்கை அருகே மல்லல் ஊராட்சி பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாக்கண்ணு (70). அவரது கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். மூதாட்டி தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் அவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் முன் உள்ள கழிப்பறை மட்டும் தப்பியது. தங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் கழிப்பறையில் சமையல் செய்து அம்மாக்கண்ணு வசித்து வந்தார். அவருக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிட மானியம் ரூ.12 ஆயிரமும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து நேற்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தர வின்படி, கழிப்பறையில் வசித்த மூதாட்டியை வேறு வீட்டில் தங்க வைக்க வருவாய்த் துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அங்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அரவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மூதாட்டிக்கு கழிப்பறை மானியம் ரூ.12 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அம்மாக்கண்ணு நன்றி தெரிவித்தார்.