

திசையன்விளை அருகே பல ஆயிரம் கனஅடி தண்ணீரை உள்வாங்கினாலும் நிரம்பாத அதிசய கிணற்றில், சென்னை ஐஐடி குழுவினர் நேற்று ஆய்வைத் தொடங்கினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், திசையன்விளை தாலுகா கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. திசையன்விளை அருகிலுள்ள ஆயன்குளம் ஆற்றுப்படுகை நிரம்பி, அதிலிருந்து உபரிநீர் வெளியேறியது. இந்த நீர், ஆயன்குளத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் சென்றது. விநாடிக்கு 50 கனஅடி வீதம் தொடர்ச்சியாக பல நாட்கள் இந்த கிணற்றுக்குள் தண்ணீர் விழுந்தபோதும், தற்போது வரை அக்கிணறு நிரம்பவில்லை. இது, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் எங்கே செல்கிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் இவ்வாறு நடைபெறுவது வழக்கம்தானாம். அதேநேரத்தில், இப்பகுதியைச் சுற்றி 20 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்பு தண்ணீர் நல்ல தண்ணீராக மாறவும் இக்கிணறு பயன்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்குமுன் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆகியோர், இந்த கிணற்றை பார்வையிட்டனர். இக்கிணறு நிரம்பாத காரணத்தை கண்டறிய, சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்ய வேண்டுமென, தமிழக அரசுக்கு ஆட்சியர் விஷ்ணு பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையை ஏற்று சென்னை ஐஐடியில் இருந்து பேராசிரியர்கள் வெங்கட்ரமணன், சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், ஆயங்குளம் கிணற்றில் ஆய்வைத் தொடங்கினர்.
அருகிலுள்ள கிணறுகள் வழியாக இந்தக் கிணற்றின் தண்ணீர் வெளியேறுகிறதா என்பதை கண்டறிய, அனைத்து கிணறுகளின் தண்ணீரை ஆய்வுக்கு எடுத்தனர். இந்த ஆய்வு 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இக்குழுவினருடன் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
`இக்கிணறு மூலம் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுவதால், மேலும் கூடுதலாக தண்ணீரை இந்த கிணற்றுக்குள் திருப்பிவிட்டு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும்’ என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ஐஐடி குழுவினர் அளிக்கும் ஆய்வு அறிக்கையின்படி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.