Published : 03 Dec 2021 03:09 AM
Last Updated : 03 Dec 2021 03:09 AM

ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பத்தில் அழிவின் விளிம்பில் கண்ணாடி மாளிகை: புத்துயிர் கொடுக்குமா தமிழக அரசு

ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பத்தில் போதிய பராமரிப்பு இன்றி அழிவின் விளிம்பில் உள்ள கண்ணாடி மாளிகை.

திருவண்ணாமலை

ஆரணி அருகே அழிவின் விளம்பில் உள்ள ‘கண்ணாடி மாளிகை’யை புதுப்பித்து பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ளது ‘கண்ணாடி மாளிகை’ என அழைக்கப்படும் பிரமாண்ட அரண்மனை. ஆரணியை ஆட்சி செய்த 11-வது ஜாகிர்தாரான (குறுநில மன்னர்) ‘திருமலை ராவ்’ என்பவரால் கட்டப்பட்டுள்ளது. வாசல்கள், அறைகள், சுவர்கள், கதவுகள், சுவர் ஓவியம், அலங்கார விளக்குகள் மற்றும் வளைவுகள் என அனைத்தும் பிரெஞ்ச் கட்டிட கலையம்சத்தை கொண்டுள்ளது. திருமலை ராவ், தன்னுடைய காதலிக்காக கட்டினார் என்ற செவி வழி தகவல்கள் உள்ளன.

மிகப்பெரிய ஆளுமையின் கோட்டையாக திகழ்ந்த ‘கண்ணாடி மாளிகை’, சுதந்திர இந்தியாவுக்கு பிறகு பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து போனது. ஆட்சியாளர்கள் தடம் பதித்த தரைகள், சமூக விரோத கும்பலின் புகலிடமாக மாறியது. சுவர்களில் உள்ள ஓவியங்களை மறைக்கும் அளவுக்கு காதல் பித்து பிடித்த இளைஞர்களால் கிறுக்கப் பட்டுள்ளன. விலை மதிக்கக் கூடிய வாசல்கள், கண்ணாடிகள், கதவுகள்,இரும்பு சட்டங்கள், அலங்கார விளக்குகள் என அனைத்து பொருட்களும் திருடு போயுள்ளது. சுவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

சமூக விரோத கும்பலிடம் இருந்து பாதுகாக்க, கண்ணாடி மாளிகை உட்பட 3 ஏக்கர் இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வனத்துறை கொண்டு வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கண்ணாடி மாளிகையை புதுப்பித்து, சுற்றுலாத் தலமாக மாற்ற, தமிழக அரசு முன் வர வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து வரலாற்று ஆய்வாளரும், ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான விஜயன் கூறும்போது, “11-வது ஜாகிர்தார் பதவி வகித்த திருமலை ராவ் என்பவரால், 1885-95 இடைப்பட்ட காலத்தில் கண்ணாடி மாளிகை கட்டப்பட்டுள் ளது. பிரெஞ்ச் கட்டிட கலையை கொண்டது. தன்னுடைய காதலிக் காக கட்டப்பட்டது என சொல்லப்படும், அதே நேரத்தில் ஜாகிர்தாரின் ஓய்வு மாளிகையாகவும் இருந்துள்ளது. வனப்பகுதியில் மாளிகை அமைந்துள்ளதால், வேட்டையாடவும் பயன்படுத்தி இருக்கலாம்.

நாடு விடுதலை பெற்ற பிறகு, கண்ணாடி மாளிகையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. சமூக விரோத கும்பலின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதால், பெரும் சேதத்தை சந்தித்து, அழிவின் விளிம்பில் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள், சில மாதங்களுக்கு முன்பு கண்ணாடி மாளிகை கொண்டு வரப்பட்டுள்ளதால், சமூக விரோத கும்பலின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

கடந்தாண்டு பெய்த மழைக்கு கண்ணாடி மாளிகையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள் ளது. மேலும், கடந்த 2 மாதங்களாக பெய்துள்ள கனமழைக்கு, மாளிகையின் உறுதி தன்மையை கேள்விக் குறியாகியானது. மேல்தளத்தில் மழை நீர் தேங்கி, சேதத்தை அதிகரிக்க செய்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ‘கண்ணாடி மாளிகை’யை சீரமைத்து பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x