

வேலூரில் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக சார்பில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ள உள்ளார் என்று கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நாராயணன் தெரிவித்தார்.
வேலூரில் மக்கள் நலக் கூட்டணி மற்றும் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் விஸ்வநாதன் (மத்திய மாவட்டம்), பூட்டுத்தாக்கு எஸ்.நித்தியா (கிழக்கு), மதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் என்.சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர்கள் டி.சந்திரன் (மேற்கு), பி.என்.உதயகுமார் (கிழக்கு), மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தயாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சாமிக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இனமுதல்வன், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் தொடர்பாக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நாராயணன், நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக நிர்வாகிகள் இடையில் மாவட்ட அளவில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், எங்கள் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த துண்டுப் பிரசுரங்களை வரும் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை வீடு வீடாகச் சென்று கொடுக்க உள்ளோம்.
ஏப்ரல் 5-ம் தேதி முதல் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்க உள்ளோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைக் கண்காணிக்க குழுக்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
வேலூரில் ஏப்ரல் 4-ம் தேதி மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தேமுதிக மாநில மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொள்ள உள்ளார்.
கூட்டணி சார்பில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதில், தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கடுமையான கோடை வெயில் இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அரசியல் கட்சியினர் பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்க முடியவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்திட கேட்டுக்கொள்கிறோம். திருப்பத்தூர் பகுதியில் தொடர் மின் வெட்டு ஏற்படுவதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்றார்.