Last Updated : 02 Dec, 2021 05:11 PM

 

Published : 02 Dec 2021 05:11 PM
Last Updated : 02 Dec 2021 05:11 PM

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழை பயிற்று மொழியாக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றக் கிளை

கோப்புப் படம்

மதுரை

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில் "இந்தியா முழுவதும் 1,228, தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக இந்தி உள்ளது. இலவசக் கல்வி என்ற பெயரில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்கி வருகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 12 லட்சத்து 78 ஆயிரத்து 271 மாணவர்களில் 95 சதவீதம் பேர் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். இவர்களுக்கு சமஸ்கிருதத்தை கட்டாயமாக்குவதும், இந்தி மொழியில் பயிற்றுவிப்பதும் அநீதியானது.

எனவே, தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழியை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்." என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக உள்ளது. தமிழை பாடமாக பயில விரும்பும் மாணவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இப்பள்ளிகள் நடத்தப்படுகிறது. இதனால் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க முடியாது எனத் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி வழங்கும் நோக்கத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகின்றன என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x