

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றுகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (டிச.2) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறும். பின்னர் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இதுமேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கரைப் பகுதியை வரும் 4-ம் தேதி காலை நெருங்கக் கூடும்.
இதன் காரணமாக 2-ம் தேதி தென்கிழக்கு, அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 70 கி.மீ.வேகத்திலும், 3-ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 65 முதல் 85 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கும் ஆந்திரா,ஒடிசா கடலோர பகுதிகள், வடமேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் 2-ம் தேதி (இன்று) மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.