Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM

வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுக்கு அனுமதி கோரி அதிமுக சார்பில் மனு

சென்னை

வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அரசுடமையாக்கி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதை கையகப்படுத்தி, அரசுடமையாக்கி கடந்த அதிமுக அரசு உத்தரவுகளை பிறப்பித்தது. வேதா நிலையம் இல்லத்துக்கான இழப்பீட்டுத்தொகையும் நீதிமன்றத்தில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்றும், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்தும் கடந்த நவ.24 அன்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல தனி நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் அதிமுக சார்பிலும், சி.வி.சண்முகம் தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், புகழ்பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்றுவது புதிதல்ல. உலகத் தலைவர்கள் பலரின் இல்லங்கள் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளன. வேதா நிலையத்தை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் தனக்கு மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளது. அதற்கு அனுமதிஅளிக்க வேண்டும். அதேபோல வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்பன போன்ற தனி நீதிபதியின் கருத்துகள் தேவையற்றவை.

இந்த தீர்ப்பு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுப்படி வேதா நிலையம் இல்லத்தின் சாவியை தீபா, தீபக்கிடம் ஒப்படைத்து விட்டால், அது அதிமுகவுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை அமைக்கப்பட்டதன் நோக்கமும் வீணாகிவிடும். வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பாக கருத்துகள் கோரப்பட்டதாகவும், அரசு தன்னிச்சையாக செயல்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் இதில் பொது பயன்பாடு இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x