

கோவையின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஏற்ப அரசு நிர்வாகம் செயல்படவில்லை என வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவினர் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு. ஆட்சியில் இல்லை என்றால் ஒரு பேச்சு என்று இருக்கின்றனர். அரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போடுவது, தேர்தலை நடத்தக் கோருவது திமுகவுக்கு வாடிக்கை.
மழைக்காலம் வருகிறது. மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும். புதிதாக சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று தெரிவித்தேன். ஆனால், எந்தப் பணியும் நடைபெறவில்லை.
ஆங்காங்கே சில தற்காலிக பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. கோவையின் அடிப்படை பிரச்சினைகள், தேவைகளுக்கு ஏற்ப அரசு நிர்வாகம் செயல்படவில்லை. குப்பை அகற்றுவது, புதிய சாலை பணிகளில் தாமதம், குடிநீர் வருவதில் பிரச்சினை போன்றவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை வேண்டும். அதிகாரிகள் ஒப்பந்தத்தை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல், உடனடியாக மக்களுக்கான பணிகளில் வேகம் காட்ட வேண்டும்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.