

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘சாலைகளில் விபத்து நிகழும்போது, ஒரு நபர் அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களின் உயிரை காப்பாற்றும் நபருக்கு, விருது வழங்குவது தொடர்பான திட்டம், மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய நபர் தொடர்பான விவரங்கள் காவல்துறை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்டு, அதன் முன்மொழிவுகள் மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக் குழுவால் அங்கீரிக்கப்பட்டு, போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்படும். பின்னர், காப்பாற்றிய நபருக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட நபருக்கு, ஒரு வருடத்துக்கு ஐந்து முறை இந்த விருது வழங்கப்படும். மேலும், மாநில அளவில் கண்காணிப்புக் குழுவினரால் மூன்று நபர்களின் முன்மொழிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அளவிலான விருதுக்கும் பரிந்துரைக்கப்படும். மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தில் உள்ள மதிப்பீட்டுக் குழுவினரால் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பெறப்படும் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு, ஆண்டுதோறும் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.1 லட்சம் தொகை மற்றும் கோப்பை ஆகியவற்றுடன், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் போது, டெல்லியில் விருது வழங்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.