

வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் சென்னையில் வெள்ளநீர் சூழும் பகுதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வுகாண நிரந்தர வெள்ளநீர் வெளியேற்றும் கட்டமைப்பை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்பது வல்லுநர்களின் கோரிக்கையாக உள்ளது.
சென்னையில் அண்மைக் காலமாக மழை பெய்யும் நாட்கள் குறைந்து, அதிகனமழை பெய்வது அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மாநகரப் பகுதியில் ஆண்டுதோறும் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சென்னை மாநகரின் பெரும்பாலான ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டன. வியாசர்பாடி ஏரி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பாகவும், கொடுங்கையூர் ஏரி முத்தமிழ்நகர் வீட்டு வசதி திட்ட பகுதியாகவும் மாறிவிட்டது.
வேளச்சேரி ஏரி 107 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. அங்கு 21 ஹெக்டேர் வீட்டு வசதி வாரியத்துக்கும், சுமார் 60 ஹெக்டேர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும், தற்போது ஏரி 22 ஹெக்டேர் பரப்பளவாக சுருங்கிவிட்டதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று கொளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு காரணமாக 71 ஹெக்டேராக சுருங்கிவிட்டதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படுவதால் சென்னையில் நீர் செல்ல வழியின்றி தேக்கமடைவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான நிரந்தரத் தீர்வு குறித்து நீரியல் வல்லுநர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கூறியதாவது:
இந்தியாவில் எந்த மாநகருக்கும் இல்லாத சிறப்பு, சென்னை மாநகருக்கு உண்டு. வெள்ளநீர் வடிவதற்காகவே இயற்கையாக அமைந்த ஆறுகளாக வடக்கே ஆரணியாறு, கொசஸ்தலையாறு, மத்தியில் கூவம் ஆறு, தெற்கில் அடையாறு ஆகியவை உள்ளன. இவை அனைத்துமே வெள்ளநீர் வடிகால்களாகும். இந்த ஆறுகள் சென்னை மாநகருக்கு மட்டுமின்றி, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்குமான வடிகால்களாகும்.
பக்கிங்ஹாம் கால்வாய் பல காலமாக சென்னை மாநகரை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி வருகிறது. இவை மட்டுமின்றி 30-க்கும் மேற்பட்ட கால்வாய்கள் அமைந்துள்ளன. இவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும், பல இடங்களில் இணைப்புகள் இன்றியும் காணாமல் போய்விட்டது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பல ஏரிகளை விரிவாக்கம் என்ற பெயரில் அழித்துவிட்டோம். இன்று சென்னையில் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் மக்கள் தவிப்பதற்கு இதுவே பிரதான காரணமாகும்.
2005-ம் ஆண்டு 300 இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. தற்போது 600 இடங்களுக்கு மேல் தேங்குகிறது. சென்னையில் உள்ள திறந்தவெளி நிலங்கள் சுருங்கிவிட்டதுதான் இதற்கு முக்கிய காரணம்.
பல இடங்களில் சாலைகள் உயர்த்தி போடப்பட்டு வீடுகள் தாழ்வாக உள்ளன. இக்காரணங்களால் சென்னையில் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகளில் நாள் கணக்கில் தேங்கி நிற்கிறது. இதை ராட்சத குழாய் மூலமாக வெளியேற்றலாம்.
ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவுக்கு வெளியேற்றுவதால் பயன் இல்லை. எந்த கால்வாயை எந்த ஆற்றுடன் இணைக்க வேண்டும் என்பது குறித்து தீர ஆராய்ந்து, மாநகரின் பல பகுதிகளில் உள்ள தாழ்வு, உயர்வுகளை அளந்து அதன்படி ராட்சத குழாய்களை நிரந்தரமாக அமைத்து வெளியேற்றலாம். இதே முறை தான் கொல்கத்தாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
2005-ம் ஆண்டு 300 இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. தற்போது 600 இடங்களுக்கு மேல் தேங்குகிறது. திறந்தவெளி நிலங்கள் சுருங்கிவிட்டதுதான் இதற்கு முக்கிய காரணம்.