

தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ளை பாதிப்பை தடுக்கும் வகையில் ரூ.70 கோடியில் புதியதிட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழையின்போது, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், ஆதனூர், மணிமங்கலம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மிகக்கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. இதனால் கோடிக்கணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டது.
அப்போது நீர்வளத் துறையினர் ரூ.53 கோடியில் மூடு பாதாள கால்வாய், கிளைக் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்தினர். இதனால் தாம்பரம், ஊரப்பாக்கம், ஆதனூர், மண்ணிவாக்கம், மணிமங்கலம் போன்ற பகுதிகள் 90% வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டன. ஆனால், முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகள் ஆண்டுதோறும் மழையின்போது பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.
இதற்காக கடந்த ஆண்டு ரூ.70 கோடி செலவிலான திட்டத்தை நீர்வள ஆதாரத் துறையினர் அரசுக்கு பரிந்துரைத்தனர். தற்போது அந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு, இந்தப் பணி தொடங்கும்.
இந்தத் திட்டம் குறித்து நீர்வள ஆதாரத் துறையினர் கூறியதாவது: அடையாறு ஆற்றுப்படுகையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் ஒவ்வோர் ஆண்டும் பல பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த வெள்ள பாதிப்பைத் தடுக்க, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடையாறு ஆற்றுப்படுகையில், 127 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் நேரடியாக அடையாறு ஆற்றுக்குச் செல்வதற்கு, கால்வாய் வசதி போதிய அளவில்இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பில் இருந்த கால்வாய்கள் மீட்கப்பட்டு சீரமைக்கப்பட்டன. கால்வாய்கள் இல்லாத பகுதிகளில் மூடு கால்வாய் அமைக்கப்பட்டன. இந்தத் திட்டம் பெரிய வெற்றியை கொடுத்தது.
முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர் பகுதிகளில் வெள்ள பாதிப்பைக் குறைக்க ரூ.70 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது சோமங்கலம், மணிமங்கலம், சேத்துப்பட்டு, மலைப்பட்டு போன்ற பகுதியில் உள்ள சுமார் 30 ஏரிகளில் இருந்து வரும்உபரிநீர் கால்வாய் மூலம் நேரடியாக அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் அருகே ராயப்பா நகரில் இணைகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் வெள்ள பாதிப்புஏற்படுகிறது. இதைத் தடுக்க மாற்றுப்பாதையில் புதிதாக மூடு கால்வாய் அமைக்கப்பட்டு, அடையாறு ஆற்றில் இணைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில், ரூ.40 கோடியில் மூடுகால்வாய் திட்டத்தை செயல்படுத்தவும், மீதி நிதியில் வரதராஜபுரம் பகுதிகளில் அடையாறு ஆற்றைஆழப்படுத்தி கரையை உயர்த்திபலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் ஜனவரி மாதத்துக்குப் பிறகு இந்தப் பணி தொடங்கும். மேலும், அடுத்த மழையில் முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றனர்.