புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வீடு முற்றிலும் இடிந்து விழுந்து கிடக்கிறது. படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வீடு முற்றிலும் இடிந்து விழுந்து கிடக்கிறது. படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சிலிண்டர் வெடித்து விபத்துக் குள்ளான வீடு முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. நகராட்சி அதிகாரிகள் வீட்டை பார்வையிட்டு அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அங்காளம்மன் நகரில் வசித்து வருபவர் சுரேஷ். உழவர்கரை மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான 3 மாடி வீடு முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்கு தெருவில் இருந்தது. வீட்டின் கீழ்தளம் மற்றும் முதல் இரண்டு தளத்திலும் தலா 4 குடியிருப்புகள் இருந்தன. வீட்டின் முன்புறம் சுரேஷ் பாஜக அலுவலகம் நடத்தி வந்தார். அதே தளத்தில் சுரேஷின் சித்தி எழிலரசி மற்றும் அவரது மகள் நிதி ஒரு குடியிருப்பிலும், எழிலரசியின் தாய் ஜோதி ஒரு குடியிருப்பிலும் தங்கியிருந்தனர். கடந்த 27-ம்தேதி எழிலரசியின் வீட்டில் பயங்கர சத்தத்துடன் விபத்து நடந்தது. இதில் வீடு இடிந்தது. எழிலரசி, நிதி, ஜோதி ஆகிய 3 பேரும் தீக்காயங்களுடன் இடிபாடுகளுடன் கிடந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுகுறித்து முத்தியால் பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், சிலிண்டரில் இருந்து கசிந்த காஸ் அறை முழுவதும் நிரம்பி இருந்த நிலையில் மின்விளக்கின் சுவிட்சை ஆன் செய்தபோது வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. விபத்து நடந்த வீடு முழுவதும் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்ததால் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மோசமான நிலையில் இருந்த அந்த வீடு நேற்று முற்றிலும் இடிந்து விழுந்தது. பயங்கர சத்தம் கேட்கவே பொதுமக்கள் மீண்டும் அச்சத்துடன் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் சிவக்குமார் மற்றும் உதவி பொறியாளர் தலைமையிலான குழுவினர் பொக்லைன், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் அங்கு சென்று விசாரித்தனர். பின்னர் இடிந்து விழுந்து கிடந்த வீட்டின் அனைத்து பகுதிகளையும் ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in