மக்கள் நலன் காக்கும் கூட்டணி பாஜகதான்: தமிழிசை
உண்மையிலேயே மக்கள் நலன் காக்கும் கூட்டணி என்றால் அது பாஜகதான் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்களால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட கூட்டணி. அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி இருக்கிறது. எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்கள் நலக் கூட்டணி எந்த வித அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
அதனால் தமிழக மக்கள் பாஜக தலைமையிலான கூட்டணியைத்தான் இப்போது நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். அதனால் நாங்கள் மக்களை நோக்கி அசுர பலத்துடன் களம் இறங்குகிறோம்.
வெகுவிரைவில் வேட்பாளர் பட்டியலை எதிர்பார்க்கலாம். தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கலாம். மக்கள் நலனை முன்னிறுத்தும் கட்சிகள்தான் எங்களோடு இணைகிறார்கள்.
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதிலேயே கட்சிகள் குறிக்கோளாக இருந்ததால் மக்கள் நலன் பின் தள்ளப்பட்டுவிட்டது. மக்கள் நலக் கூட்டணியில் மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு விஜயகாந்த் பெயர்தான் முன்னிறுத்தப்படுகிறது. அதனால் உண்மையிலேயே மக்கள் நலன் காக்கும் கூட்டணி என்றால் அது பாஜகதான்.
பாஜகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. நிச்சயமாக தமிழக தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
வைகோவுக்கு பதில்
பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் சேர்ந்தால் மதிப்பு உயராது என்று நான் சொன்னதை வைகோ வழக்கம் போல தவறாகப் புரிந்துகொண்டார்.
ஒரு எண்ணுடன் பூஜ்ஜியம் சேரும்போது அதன் மதிப்பு உயரும். பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் சேரும் போது அதன் மதிப்பு உயராது. மறுபடியும் ஒரு பூஜ்ஜியமாக மாறும். ஆக, பாஜகவோடு தேமுதிக சேர்ந்திருந்தால் எண்ணோடு சேர்ந்திருக்கும் பூஜ்ஜியம் போல மதிப்பு உயர்ந்திருக்கும்.
மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்திருப்பது பூஜ்ஜியம் எல்லாம் சேர்ந்தால் எப்படி மதிப்பு உயராதோ அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையைத்தான் உருவாக்கி இருக்கிறது என்று கூறினேன்.
தரம் தாழ்ந்த அரசியல் என்னிடம் இல்லை
நானும் ஒரு அரசியல் கட்சித் தலைவர்தான். தேமுதிக எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக அக்கட்சியை பூஜ்ஜியம் என்று சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்த அரசியல் என்னிடம் இல்லை. ஒரு உதாரணத்துக்கு அப்படி சொன்னேன். எங்களுடன் சேர்ந்திருந்தால் பன்மடங்கு மதிப்பு உயர்ந்திருக்கும். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்ததால் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்ற கவலையுடன்தான் சொன்னேன்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
