

கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. முன்னதாக, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏறத்தாழ 2 ஆண்டுகள் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி பயில முடியாமல் போனதால், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கேச் சென்று, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கல்வி கற்பிக்கும் வகையில் ‘இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்களைக் கொண்ட கலைக்குழுவினர் கிராமங்கள்தோறும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தங்களின் பிள்ளைகளை மாலை நேர பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்க உத்வேகம் அளிப்பதாக கிராமப்புற பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்' தொழில்வாய்ப்பை வழங்கி, வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆசிரியர் க.தங்கபாபு கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் ‘இல்லம் தேடி கல்வி' திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் பணியில் 8 கலைக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் 100 கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கல்வியை இழந்த மாணவர்களுக்கு கல்வியையும், வேலை இழந்த கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் இத்திட்டம் தந்துள்ளது என்றார்.
இதுகுறித்து நாடகக் கலைஞர் தங்க.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: 2020 தொடக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, தொழில் வாய்ப்பின்றி தவித்து வந்தோம். இந்தச் சூழலில், தற்போது ‘இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் மூலம் 100 குடும்பங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.750 ஊதியம் மற்றும் பொதுமக்கள் தரும் அன்பளிப்புகள் கிடைத்து வருகின்றன. எங்களின் கலைத் தொழில் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பயன்படுகிறது என்ற மகிழ்ச்சியுடன் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாடகம், பாட்டு உள்ளிட்ட அனைத்து கலைநிகழ்ச்சிகளையும் நாங்கள் நடத்துவதால், எங்களின் உற்சாகம் பொதுமக்களை மேலும் சிந்திக்க வைத்துள்ளது. கரோனா பேரிடரை எதிர்கொள்ளும் போரில் எங்களுக்கும் ஒரு சேவைப் பணி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என்றார்.