தற்கொலை செய்த கோவை மாணவிக்கு மேலும் இருவர் பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதி

தற்கொலை செய்த கோவை மாணவிக்கு மேலும் இருவர் பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதி
Updated on
1 min read

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவிக்கு, மேலும் இருவர் பாலியல் தொல்லை அளித்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, 17 வயது மாணவி, இயற்பியல் ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால், கடந்த மாதம் 11-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரத்திலுள்ள மத்தியப் பகுதி மகளிர் போலீஸார் விசாரித்தனர். அதன் இறுதியில் போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டு, இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி (31) கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தை மறைத்ததாக, போக்சோ பிரிவில் வழக்குப்பதியப்பட்டு, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, மாணவி தற்கொலை செய்த சமயத்தில்,அவரது வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அக்கடிதத்தில், இரு மாணவிகளுடைய உறவினர்களின் பெயர்கள், கைதான ஆசிரியரின் பெயர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு விட்டார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மற்ற இரு மாணவிகளின் உறவினர்கள் யார்?, எதற்காக அவர்களது பெயரை மாணவி குறிப்பிட்டுள்ளார், அவர்களுக்கும் இந்த மாணவிக்கும் என்ன தொடர்பு என்ற அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர்.

இருவரிடம் விசாரணை :

மறுபுறம், மற்றொரு போலீஸ் பிரிவினர், இக்கடிதத்தில் உள்ள கையெழுத்து உயிரிழந்த மாணவியுடையதா என்பதை கண்டறிய, அவரது பாட புத்தகங்களை கைப்பற்றி, ஒப்பீட்டுக்காக சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பெயர்களையுடைய, இரு சக மாணவிகளின் உறவினர்கள் ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வந்தது தெரிந்தது.

இருவரையும் பிடித்து போலீஸார் விசாரித்தனர். எதற்காக மாணவி உங்களது பெயரை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், அவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, பாலியல் தொல்லை அளித்தீர்களா என்பது குறித்து கேட்டு விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், மேற்கண்ட இருவரும் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இவர்களிடம் விசாரித்து வரும் போலீஸார், கடிதத்தை எழுதியது மாணவி தான் என்பதை உறுதி செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, மகளிர் போலீஸார் கூறும்போது,‘‘ மேற்கண்ட வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளதால், இதுகுறித்து கருத்து எதுவும் தற்போது தெரிவிக்க முடியாது,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in