

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கங்களில் பதிவு செய்த காஞ்சாம்புறத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் சுரேஷ்(26) என்பவரை சைபர் கிரைம் போலீஸார் கிஅது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்து அவதூறு பரப்புவது, மற்றும் அவர்களின் போட்டோ, வீடியோக்களை தவறாக சித்தரித்து வெளியிடுவது போன்ற தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து, இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து புகார் அளிக்கும் பெண்களின் பெயர், விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு முகநூல் பக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இரு பெண்களின் புகைப்படம், வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கத்தில் சுரேஷ் பதிவிட்டது கண்டறியப்பட்டது.
அவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்திற்கு, எஸ்.பி. பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து இன்று சைபர் கிரைம் போலீஸார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகளை பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பத்ரிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.