

தமிழ்நாட்டில் தொழில்கள் பாதிப்படைய மது முக்கிய காரணமாக உள்ளது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கோவையில் பாமக சார்பில் தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான செயல்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
கோவையில் தொழில்களும் இல்லை; மான்செஸ்டர் என்ற பெயரும் இல்லை.
தமிழகத்தில் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தி மதிப்பீடு என்பது ரூ.11 லட்சம் கோடி. புள்ளி விவரப்படி இது ரூ.13.2 லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டும். ரூ.2 லட்சம் கோடி குறைய முக்கியக் காரணம் மது என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மது என்பது சுகாதார பாதிப்பு, சமூகப் பாதிப்பு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தொழிலுக்கான பாதிப்பும் அதுதான். சேவைத் துறை மூலம் 60 சதவீதம் உற்பத்தி உள்ளது. இதில், மொத்த உற்பத்தி ரூ.6.6 லட்சம் கோடி. 2-வதாக உற்பத்தி துறையில் 26 சதவீதம்; ரூ.2.86 லட்சம் கோடி இதில் அங்கம் வகிக்கிறது. வேளாண்துறையில் 14 சதவீதம்; ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கோடி. ஆனால் இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் 66 சதவீதம் பேர் வேளாண் துறையிலும், உற்பத்தித் துறையில் 26 சதவீதம் பேரும், சேவைத் துறையில் 11 சதவீதம் பேரும் உள்ளனர். தொழில் வளர்ச்சி பின்னோக்கி செல்வதையே இது காட்டுகிறது. 50 ஆண்டு காலம் திமுக, அதிமுக ஆட்சி செய்ததன் கோலம்தான் இது. ஆட்சியாளர்களுக்கு தொலைநோக்கு சிந்தனை இல்லை; தொழில் வளர்ச்சிக்கான பார்வை இல்லை.
தமிழ்நாட்டில் ஒரே ஒரு உற்பத்தி மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுதான் டாஸ்மாக் மது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 ஆயிரத்து 500 கோடியாக இருந்த மது உற்பத்தி, இப்போது ரூ.26 ஆயிரம் கோடியாகியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துரையாடலில் பங்கேற்றோரின் கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்தார்.