குமரியில் இருந்து கேரளாவிற்கு 20 மாதங்களுக்கு பின்பு அரசு பேரூந்துகள் இயங்கியது: பயணிகள் மகிழ்ச்சி

குமரியில் இருந்து கேரளாவிற்கு 20 மாதங்களுக்கு பின்பு அரசு பேரூந்துகள் இயங்கியது: பயணிகள் மகிழ்ச்சி
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு 20 மாதங்களுக்கு பின்னர் அரசு பேரூந்து போக்குவரத்து இன்று துவங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான பேரூந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகம், கேரளா இடையே கடந்த 20 மாதங்களாக அரசு பேரூந்து போக்குவரத்து நடைபெறவில்லை.

தற்போது கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு பேரூந்து போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் கேரளாவிற்கு நடைபெறாமல் இருந்து வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அரசு பேரூந்துகள் இயங்காததால் அங்கு பணிக்கு சென்று வருவோர், மற்றும் பல்வேறு அலுவலர் காரணமாக செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேரூந்து போக்குவரத்தை துவங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராய் விஜயன் வலியுறுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேரூந்துகளை இயக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழகம், கேரளா இடையேயான பேரூந்து போக்குவரத்து நேற்று துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 20 மாதங்களுக்கு பின்பு இன்று கேரளாவிற்கு பேரூந்துகள் போக்குவரத்து துவங்கியது.

நாகர்கோவில் வடசேரி பேரூந்து நிலையத்தில் இருந்து இன்று காலையிலேயே கேரளாவிற்கு பேரூந்துகள் புறப்பட்டு சென்றன. இதைப்போல் திருவனந்தபுரம் பேரூந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பேரூந்துகள் இயக்கப்பட்டன. கேரளாவில் இருந்து வந்த பேரூந்துகள் ஊரடங்கு நேரத்தில் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று பேரூந்துகள் இயங்க தடை நீங்கியதை தொடர்ந்து நாகர்கோவில் வரை கேரள பேரூந்துகள் வந்தன.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு இன்று 35 பேரூந்துகள் இயக்கப்பட்டன. இடதைப்போல் கேரளாவில் இருந்து நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, கன்னியாகுமரிக்கு 27 பேரூந்துகள் இயக்கப்பட்டன. 20 மாதங்களுக்கு பின்னர் குமரி-கேரளா இடையே அரசு பேரூந்துகள் இயக்கப்பட்டதால் தமிழக, கேரள பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in