Published : 01 Dec 2021 02:48 PM
Last Updated : 01 Dec 2021 02:48 PM

சட்டவிரோத மத வழிபாட்டுத் தலம்; உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

சட்டவிரோதமாக மத வழிபாட்டுத் தலம் கட்டியிருந்தால் அவற்றுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பென்னலூர் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பாதையையும், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளதாக கூறி, கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தாரர் தாக்கல் செய்த பதில் மனுவில், தேவாலயம் கட்ட எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும், பாதையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், எந்த விவரங்களும் இல்லாமல், தேவாலயம் கட்டியவருக்கு ஆதரவாக பதில்மனு தாக்கல் செய்த தாசில்தாரருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்சேபங்கள் இல்லை என்பதற்காக அரசு நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆக்கிரமிப்புகள் எந்த இடத்தில் இருந்தாலும் அவற்றின் அகற்ற நடவடிக்கை எடுத்து, அரசு சொத்துக்களை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தேவாலயம் கட்டுவதாக இருந்தால் உரிய கட்டிட அனுமதியும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியும் அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தேவாலயம் எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதால் அதை நான்கு வாரங்களில் இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றத்திற்கு உண்மைத் தகவல்களை மறைக்கும் வகையில் எந்த விவரங்களும் இல்லாமல் பதில்மனு தாக்கல் செய்த தாசில்தாரருக்கு எதிராக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆக்கிரமிப்புகள், சட்டவிரோதமாக மத வழிபாட்டுத் தலங்கள் கட்டியிருந்தால் அவற்றுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
'

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x