

89-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஆசிரியர் அண்ணன் மானமிகு கி.வீரமணிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:
"டிசம்பர் 2ஆம் நாளில் பிறந்தநாள் விழா காணும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நெஞ்சம் இனிக்கும் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கம்போல இந்த ஆண்டும் அவரின் பிறந்தநாள் சுயமரியாதை நாளாக நாடு முழுக்க கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிவு மணம் கமழும் நூல்கள் பெரியார் திடலில் வெளியிடப்பட உள்ளது.
8 வயதிலேயே அறிவாசான் பெரியாரிடம் அடைக்கலமாக சென்று அவருக்கு தொண்டு ஊழியம் செய்து அவரது கொள்கைகளை நாடு முழுக்க பரப்பி அவர் நிறுவிய திராவிடர் கழகம் எனும் தமிழர் உரிமை காக்கும் பாசறையை உயிர்த்துடிப்போடு இயக்கிவரக் கூடிய கி.வீரமணி 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு உரியவர் என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆவார்.
“வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூகநீதிக் கொள்கை பளிங்கு சமாதிக்குப் போயிருக்கும். அதிலிருந்து வீரமணியின் செல்வாக்கு பலமடங்கு உயர்ந்தது. தமிழக பொதுவாழ்வில் அவருக்கு பெரிய வடிவமும் அமைந்துவிட்டது. அவருடைய தலைமையில் திராவிடர் கழகம் நடத்துகின்ற போராட்டம் எதுவாக இருந்தாலும் ஒழுங்காகவும், கட்டுப்பாட்டுடனும் நடப்பது வழக்கமாகிவிட்டதால் திராவிடர் கழகம் தனி மரியாதையை பெறுவது சகஜமாகிவிட்டது”
என்று மண்டல் குழு அறிக்கை நிறைவேற்றப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளேடு, ஆசிரியர் கி.வீரமணியின் தனிச் சிறப்பை எடுத்து விளக்கியது.
“உலகத்தில் தமிழ் இனம், திராவிடப் பாரம்பரியம் எங்கிருந்தாலும் மகிழ்வோடும், இன்ப முகிழ்வோடும் வாழ வேண்டும் என்பதனை உயிர் மூச்சாய் கொண்டு வாழும் ஒப்பற்ற தலைவர் கி.வீரமணி. தமிழ்ச் சமுதாயம் எழுச்சியுடன் வாழ வேண்டும் என சிந்தித்த தந்தை பெரியாரின் விரிவாக்க சிந்தனையாளர் அவர். தமிழகத்தில் எதையும் படித்து ஆய்ந்து ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் கருத்து வளமிக்க கரிபால்டி அவர். அவர் உயிர் வாழ்வது தமிழர்களுக்காக, உணர்வு பொங்க அவர் பேசுவது, தமிழர் மேம்பாட்டுக்காக ஓய்வின்றி உழைப்பது ஆகியவைகள் அவரின் அரும்பெரும் குணநலன்கள்”
என்று மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நேசன் எனும் நாளேடு, ஆசிரியர் கி.வீரமணிக்கு புகழ் மாலை சூட்டி பெருமைப்படுத்தியது.
இவ்வாறு கடல் கடந்த நாடுகளில் உள்ளவர்களும் பாராட்டி பெருமை சேர்க்கும் பெரியாரின் கொள்கை வாரிசு - பெரியாரின் கொள்கை முரசு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆயிரம் பிறை கண்டு நூறாண்டுக்கு மேல் நல்ல உடல் நலத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழினம் காக்கும் தூய பணியை தொய்வின்றி தொடர வேண்டும் என்ற விழைவுடன் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்."
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.